தெலுங்கில் கார்த்திகை தீபம், ராதம்ம பெல்லி, திரிநாயணி ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சந்திரகாந்த்.
தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் அல்காபூர் பகுதியில் வசிக்கும் தனது வீட்டில் இறந்துகிடந்தார் நடிகர் சந்திரகாந்த். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீரியலில் சந்திரகாந்த் உடன் நடித்த நடிகை பவித்ரா ஜெயராம் சமீபத்தில் (மே.12) கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தின்போது சந்திரகாந்த், பவித்ராவின் தங்கை அபக்ஷா, கார் ஓட்டுநர் ஸ்ரீகாந்த் உடன் பயணித்துள்ளார்கள். இதனை அடுத்து இந்த சம்பவம் நடைபெற்றது தெலுங்கு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சந்திரகாந்த், நடிகை பவித்ரா ஜெயராம் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்திருக்கிறார்கள். விபத்து நடந்த சமயத்தில் சந்திரகாந்த்தும் உடன் பயணித்துள்ளார். நடிகை பவித்ராவின் மரணம் இவரை மிகவும் பாதித்தை தனது இன்ஸ்டாகிராம் விடியோவாக வெளியிட்டுள்ளார். “இன்னும் 2 நாள்கள் காத்திரு” என 3 நாள்களுக்கு முன்னதாக விடியோவை பதிவிட்டுள்ளார். அதில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களின் தொகுப்புகள் இருக்கின்றன.
நேர்காணல் ஒன்றில் சந்திரகாந்த் விரைவில் தங்களது காதலை அதிகாரபூர்வமாக அறிவிப்போமெனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
6 நாள்களுக்கு முன்பாக, “மீண்டும் ஒரு முறை என்னை மாமா என்று கூப்பிடு” என அவர்கள் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இந்தப் பதிவுகளில் தவறான முடிவினை எடுத்துவிட்டதாக வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]