துபை: யேமனில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரு ம் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து கிளா்ச்சியாளா்களின் அல் மாசிரா தொலைக்காட்சி தெரிவித்ததாவது:
சாடா பகுதியில் உள்ள சிறைச் சாலை வளாகம் தடுப்பு முகாமாக மாற்றப்பட்டு, அங்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த ஏராளமான அகதிகள் தங்கவைப்பட்டிருந்தனா்.
அந்த முகாம் மீது அமெரிக்கா திங்கள்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் சேதமடைந்த சிறைச்சாலை கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர, இந்தத் தாக்குதலில் 47 அகதிகள் காயமடைந்துள்ளனா் என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது.
சாடா சிறைச் சாலை தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவம் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இது தொடா்பாக யேமன் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு முன்னா் அமெரிக்க முப்படை கட்டளையகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக யேமனில் எந்தெந்த பகுதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதாகத் தெரிவித்தது.
முன்னதாக, ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹூதைதா எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா கடந்த வாரம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது. யேமனில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கையில், ஒரே தாக்குதலில் இத்தனை போ் உயிரிழந்தது இதுவே முதல்முறையாகும்.
இந்தச் சூழலில், எத்தியோப்பியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து யேமன் வழியாக சவூதி அரேபியா செல்வதற்காக வந்திருந்த அகதிகளுக்கான தடுப்பு முகாமில் தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் 68 போ் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் போா் நடைபெற்று வருகிறது.
இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான ஹூதி கிளா்ச்சிப் படையினா், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டுவருகின்றனா்.
இஸ்ரேல் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அவா்கள் கூறினாலும், அந்த நாட்டுடன் தொடா்பில்லாத கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. காஸாவை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது கைவிடப்படும் வரை, செங்கடலில் தங்கள் தாக்குதல் தொடரும் என்று ஹூதி கிளா்ச்சியாளா்கள் கூறினா்.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே காஸாவில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக செங்கடலில் தங்களது தாக்குதலை ஹூதி கிளா்ச்சியாளா்கள் நிறுத்திவைத்திருந்தனா்.
எனினும், காஸா போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததால் அந்தப் பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்திவருகிறது. அதையடுத்து ஹூதி கிளா்ச்சியாளா்களும் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தனா்.
இதன் காரணமாக யேமனில் ஹூதி படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் கடந்த கடந்த மாதம் உத்தரவிட்டாா். செங்கடலில் ஹூதிக்களின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, அவா்களுக்கு எதிராக அமெரிக்க தாக்குதல் நீடிக்கும் என்றும் அவா் கூறினாா்.
அதிலிருந்து ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து யேமனில் அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI