புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில், ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு இடையே, புதிய சிசிடிவி காட்சிகளை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
அந்த விடியோவில், ஸ்வாதி மாலிவால், அரவிந்த் கேஜரிவாலின் வீட்டுக்குள் இருந்து, பெண் பாதுகாவலர்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறார். ஆனால், பாதுகாவலர்களிடம், ஸ்வாதி மலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
இந்த விடியோ காட்சிகளை வெளியிட்டு, ஆம் ஆத்மி கூறியிருப்பதாவது, இந்த விடியோ வெளியாகியிருப்பதன் மூலம் ஸ்வாதி மாலிவாலின் புகார் குறித்த உண்மை தெரிய வந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தாா் ஸ்வாதி மாலிவால்
முன்னதாக, பாஜகவினால் தூண்டிவிடப்பட்டு, அரவிந்த் கேஜரிவால் மீது அவதூறு ஏற்படுத்தி சிக்கவைக்க ஸ்வாதி மாலிவால் அனுப்பப்பட்டிருப்பதாகவும் முதல்வரின் உதவியாளர் மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை கட்சி மறுப்பதாகவும் அமைச்சர் அதிஷி தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது-
கடந்த மே 13-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சந்திக்கச் சென்ற போது, அவரது தனி உதவியாளரால் தாக்கப்பட்டதாக பரபரப்புப் புகாரை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் வீட்டில், பாதுகாப்பு ஊழியா்களுடன் ஸ்வாதி மாலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடும் 52 வினாடிகள் காணொளி நேற்று வெளியான நிலையில், புதிய விடியோ காட்சிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
முதல் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், ஸ்வாதி மாலிவால் எம்.பி. தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியது, ‘ஒவ்வொரு முறையும் போலவே, இந்த முறையும் இந்த ‘அரசியல் கொலைகாரன்’ தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளாா். தனது ஆட்களை வைத்து அந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் பகிரச் செய்வதன் மூலம், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறாா். தாக்குவதை யாராவது காணொளி எடுப்பாா்களா?. முதல்வா் இல்லத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானவுடன், உண்மை அனைவருக்கும் தெரியவரும்’ என்று தெரிவித்திருந்த நிலையில், இரண்டாவது சிசிடிவி காட்சி வெளியாகியிருக்கிறது.